பிரபலமான இடுகைகள்

திங்கள், 14 மார்ச், 2011

சர்வாதிகாரம் -ஜனநாயகம் -கட்டுபடுத்தப்பட்ட ஜனநாயகம்

நாடு எனக்கு உரிமை அளித்துள்ள பேச்சுரிமையை தான் பயன்படுத்தியுள்ளேன். நான் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை. என் மீது குற்றங்கள் சுமத்தபட்டிருந்தாலும், நான் குறை எதுவும் சொல்ல விரும்பவில்லை.  
.          –Liu Xiaobo, 23 December 2009 .2009 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.


சீனா வின் அரசியல் மாற்றம் மெதுவாக, அமைதியாக, ஒழுங்காக கட்டுபடுத்தப்பட்டு மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் கலந்தாலோசித்து எடுக்கப்படவேண்டும். இது தான் குறைந்த செலவில் அதிகபட்ச பயனை தரும். ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட சமுதாய மாற்றமே, குழப்பமான கட்டுப்பாடில்லாத  மாற்றத்தை விட சிறந்தது, என்ற அடிப்படை அரசியல் கொள்கை எனக்கு தெரியும். ஒரு தவறான ஜனநாயக அரசாங்கத்தின் ஒழுங்கு, குழப்பமான ஒற்றை ஆட்சி முறையை விட சிறந்தது. அதனால் தான் நான் சர்வாதிகாரத்தையும் ஒற்றை ஆட்சி முறையையும் எதிர்கிறேன். இப்படி நான் நடந்துகொள்வது அரசாங்கத்தை கவிழ்க்க நான் செய்யும் சதி செயல் என்பது தவறு. எதிர்ப்பு என்பது சதிசெயல் ஆகாது.               

Liu Xiaobo, Guilty of 'crime of speaking', 9 February 2010
லியு சியோபோ - சீன நாட்டின் சர்வாதிகார கம்யுனிச அரசை எதிர்த்து ஜனநாயக முறையில் போராடிய ஒரு பேராசிரியர். ஒரு பொருளாதார நிபுணர்.

லியு சியுபாவிற்கு கடந்த 11 .12 .2009 அன்று சீனாவை ஆளும் சர்வாதிகார கம்யுனிச அரசாங்கம் தனது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஆயுள் தண்டனை விதித்தது. லியு சியாபு அரசாங்கத்திற்கு எதிராக புரளியை பேசுவதாகவும், அரசாங்கத்தை கவிழ்க்கவும், சமுகத்திற்கு ஊறு விளைவிக்கும் படி நடந்துகொள்வதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் சீன அரசாங்கத்தின் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். லியு சியாபு சார்ட்டர் -08 என்ற பிரகடனத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தினார். தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தியும், மனித உரிமைகளை வலியுறுத்தியும், ஜனநாயக ஆட்சி முறையை வலியுறுத்தியும் அந்த பிரகடனத்தில் தீர்மானங்கள் இருந்தன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் சீன நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சத்யாகிரக போராட்டம் தான் லியு சியாபு நடத்தினார். அதற்கே இந்த தண்டனை

சீனாவை பொறுத்தவரை சர்வாதிகாரம் தலை தூக்கி நிற்கிறது. அரசு விரும்பும் செய்திகள் தான் ஊடகங்களில் வரும். அணைத்து செய்திகளும் அரசின் தணிகைக்கு பிறகே ஊடகங்கள் வெளியிட முடியும்.( தற்பொழுது இலங்கையில் ராஜபக்க்ஷேவின் ஆட்சியிலும் கிட்டத்தட்ட இதே நிலைமை தான் உள்ளது என்பது கூறிபிடதக்கது.) Google வலைத்தளம் சீனாவிலிருந்து செயல்பட சீன அரசாங்கம் தடை விதித்ததும், அதனால் அது தன சேவையை ஹாங்காங் இல் இருந்து செயல்படுவதும் சீன அரசாங்கத்தின் அளவிற்கும் அதிகமான கட்டுபாடுகளினால் தான்.


சீனாவின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அளவுக்கு அதிகமான அடக்கு முறையை அரசு கையாளுகிறது என்பது முற்றிலும் உண்மை. அரசு செய்யும் தவறு வெளியே தெரியாது, தெரிந்தாலும் யாராலும் எதிர்க்க முடியாது. லியு சிபோ இதற்கு முன் மூன்று முறை சிறையில் அடைக்கபட்டிருந்தாலும், ஆயுள் தண்டனை விதிகப்படது இந்த முறை தான். லியு சியாபு ஜனநாயக முறை படி தேர்தால் நடத்தபடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  மக்களுக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வேண்டும் என்றும், அரசாங்கம் தான் செய்யும் தவறுகளுக்கு பொறுபேற்க வேண்டும் என்றும், அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவரை அடக்க நினைத்த சீன அரசு ஆயுள் தண்டனை அளித்து சிறையில் அடைத்தது.  லியு சியாபௌவின் மனைவியும் வீட்டு காவலில் வைக்க பட்டார். சீன நாடே ஒரு மிக பெரிய சிறைச்சாலை போன்றது என்றால் அது மிகை ஆகாது.

லியு சியாபு South China Morning Post என்ற இதழுக்கு கொடுத்த பேட்டியில் தனக்கு கொடுத்த தண்டனை சீனாவின் அரசியல் சட்டத்தையே மீறுவதாகவும், ஐக்கிய ஜனநாயக நாடுகளின் அகில உலக மனித உரிமை பிரகடனத்தை மீறுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். தான் இந்த தவறான தகவலையோ அல்லது உண்மைக்கு புறம்பான தகவலையோ சொல்லவில்லை என்றும், தனி நபர் பெயரை கெடுக்கும் எந்த செயலையும் தான் செய்யவில்லை என்று குறிப்பிட்டார். தனி நபரை பற்றிய தன்னுடைய மதிப்பீடுகளை கூட வெளியிடவில்லை என்று கூறினார்.    

இது ஒரு புறம் இருக்க நீண்ட நெடுங்காலமாக அமைதியான முறையில் அடிப்படை மனித உரிமைக்காக சீன நாட்டில் போராடியவர் என்ற அடிப்படையில், கடந்த 08 .10௦.2010௦ அன்று லியு சியாபு விற்கு ( Liu Xiabou ) அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு நாட்டில் எத்தகைய செயற்கரிய செயலுக்காக ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கபட்டால், அந்த நாடே மகிழ்ச்சியில் துள்ளும். மக்கள் அனைவரும் ஏதோ தங்களுக்கே பரிசு கிடைத்தது போல பெருமகிழ்ச்சி அடைவர். ஆனால் சீனாவிலோ மகிழ்ச்சி கலக்கம் இரண்டும் கலந்த கலவையாக உணர்ச்சிகள் வெளிப்பட்டன. அரசாங்கத்தை பொறுத்தவரை கலக்கத்துடன் பெரும் கோபமும் அடைந்தது.

லியு சியாபு வின் பெயர் நோபல் பரிசிற்காக பரிந்துரைக்கபட்டவர்களின் பெயர்களில் ஒன்றாக இருந்ததாக கேள்விப்பட்ட உடனேயே, அவர் பரிசு பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் சீன அரசாங்கம் செயல் பட்டது. தங்கள் அரசால் ஆயுள் தண்டனை வழங்க பட்டவருக்கு நோபல் பரிசா? என்று வெகுண்ட சீன அரசாங்கம், நோபல் பரிசுக்காக லியு சிபோ வின் பெயர் தவறான நோக்கத்தில் பரிந்துரைக்கபட்டுள்ளதாக குற்றம் சாடியது. நோபல் பரிசு கமிட்டியினரையும் சீன அரசாங்கம் கடிந்து கொண்டது. இது பற்றி நாளிதழ்களில் தவறான செய்தி வரும் படி சீன அரசு பார்த்துகொண்டது.

ஆனால் நோபல் பரிசு லியு சிபு வாங்கும் முதல் பரிசோ அல்லது பாராட்டோ அல்ல. சீன அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து பல வருடங்களாக போராட்டம் நடத்திவரும் அவருக்கு பல அமைப்புக்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும் தந்துருக்கின்றன. ஆனால் சீன அரசாங்கமோ நோபல் பரிசு கிடைப்பதை தடுக்க நினைத்து அது நிறைவேறாமல் போனவுடன் , லியு சியாபௌவிற்கு நோபல் பரிசு கிடைத்த செய்தி, சிறையில் இருக்கும் அவருக்கு கூட தெரியகூடாது என நினைத்தது.  எனவே சிறைசாலைக்குள் இந்த செய்தி இருட்டடிப்பு செய்ய பட்டது. இதனை சீன மக்களே கண்டனம் செய்தனர். சீன பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மட்டுமல்லாமல், சீனாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகள் பலவற்றின் கண்டனத்திற்கும் ஆளன்னது. வேறு வழி இல்லாமல் சீன அரசாங்கம் லியு சியாபௌவின் மனைவி மூலம் சிறைச்சாலையில் இருக்கும் லியுவிற்கு தகவல் தெரிவிக்க அனுமதி கொடுத்தது.  ஆனால் இது வரை வீட்டு காவலில் இருந்த லியு சியாபௌவின் மனைவி, வேலையில் வந்து ஊடகங்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பேட்டி அள்ளிக்க தடை விதித்தது. பலத்த காவலுடன் தான் அவர் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டு சிறையில் இருக்கும் பொழுது கடைதெருவிற்கு சென்றால் கூட காவல் துணையுடன் தான் அவர் மனைவி செல்லவேண்டிருன்தது என்பது கூறிபிடதககது. 

நோபல் பரிசு கம்மிடியை மட்டும் அல்ல சீனாவில் இருந்த நார்வே நாட்டு தூதரகத்தையும் சீன அரசு லியு சியாபௌவிற்கு நோபல் பரிசு வழங்கினால் தக்க விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என மிரட்டியது கூறிபிடதககது.

கடந்த டிசம்பர் மாதம் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு சென்று பரிசை பெற்று கொள்ள லியு சியாபு மற்றும் அவர் மனைவி இருவருக்கும் சீன அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. நோபல் பரிசு லியு சியாபௌவிற்கு என ஒதுக்க பட்ட இருக்கையின் மீது, நோபல் பரிசு வழங்கும் குழுவினரால் வைக்கப்பட்டது.      

சர்வாதிகாரம் எந்த அளவிற்கு பாயும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு. அதிகாரம் கையில் இருந்தால் ஒரு அரசு எந்த அளவிற்கு கீழ்த்தரமாக செயல்படும் என்பதற்கு இது உதாரணம்.

நம் நாட்டில் ஜனநாயக முறை அமுலில் இருக்கும் பொழுதே ஆட்சியாளர்கள் செய்யும் அதிகார துஷ்பிரய்யோகம் அனைவருக்கும் தெரிந்ததே. அரசு அலுவலகத்தில் உள்ள கடைநிலை பணியாளர் கூட, மக்கள் செலுத்தும் வரி பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதை மறந்து செய்யும் அதிகாராம் இருக்கிறதே அப்பப்பா!  

லியு சியாபௌவிர்க்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு இங்கிலாந்து நாட்டின் வெளிஉறவு துறை செயலாளர் வில்லியம் ஹய்கெ ( William Hague ) , அமேரிக்கா ஜனாதிபதி  ஒபாமா மற்றும் தலாய் லாமா (Dalai Lama ) ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி இருந்தனர். ஆனால் நாம் இந்திய அரசு கருத்து எதுவும் கூறவில்லை. ஏற்கனவே சீன அரசு இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுடன் நட்புறவை கொண்டாடுவதுடன் இந்திய எல்லை பகுதிகளுக்குள்ளும் ஊடுருவல் வேலைகளை செய்து வருகிறது. இதற்கு கருத்து தெரிவித்தால் சீனாவிற்கு இந்திய நாட்டின் மேல் உள்ள கோபம் அதிகம்  ஆகும் என நம் அரசாங்கம் நினைகின்றதோ என்னவோ !

உண்மையை பேச கூட ஒரு அரசாங்கமே தயங்குகின்றாது. அப்படி இருக்கும் பொழுது சாதாரண பொது ஜனங்கள் எப்படி உண்மையை பேச முடியும்? பயத்தின் காரணமாக அநியாயத்திற்கு துணை போவது தான் அதிகம் நடக்கிறது லியு சியாபு போன்ற தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள ஆட்களின் முதுகெலும்பு முறிக்க படுகிறது.

இது ஏதோ ஒரு நாட்டு பிரச்னை மட்டும் அல்ல. சர்வாதிகர்களை தலைவராக கொண்ட நிறுவனங்களிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. சில சமயம் சட்டத்திற்கு புறம்பானதும், அறத்திற்கு புறம்பானதும் ஆன செயல்களை நிறுவனம் செய்ய சொல்லும் பொழுது. அதில் பணி புரியும் ஊழியர்கள், பல்வேறு காரணங்களால் நிறுவன தலைவர் சொல்லுவதை கேட்கும் நிலைக்கு ஆளாகின்றனர். நேர்மை ஊழியர்களின் மனதில் இருந்தாலும் அதனை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு பணி செய்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் இத்தகைய நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது. நிறுவனத்தின் தலைவர் சர்வாதிகார போக்கு உடையவர் என்பதால் நிறுவனத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் கூட அவர் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்கள். ஆனால் நிறுவன கொள்கைக்கு நேர்மாறான, சட்டபடியும் தவறான செயலை இந்த நிறுவன தலைவர் செய்ய சொன்ன பொழுது, தன் மனசாட்சிக்கு ஒவ்வாததால் ஒரு ஊழியர் மாற்று கருத்தை தெரிவித்தார். என்ன காரணத்திற்காக அவர் அந்த கருத்தை கூறுகிறார் என்பதை பார்க்காமல். அவரை பழி வாங்கும் படலம் ஆரம்பித்தது. தனக்கு அளிக்கப்பட்ட பணிகளை அவர் சிறப்பாக செய்து வந்தாலும், மாற்று கருத்தை தொடர்ந்து அவர் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் தொடர்து வலியுறித்திய காரணத்தினால் அவர் நிறுவனத்திற்கு எதிரானவராக சித்தரிக்க பட்டார்.

சிறப்பாக பணி புரிந்த காரணத்தினால் அவருக்கு நிறுவனம் அளிக்க இருந்த பதவி உயர்வையும் நிறுவனம நிறுத்தி வைத்தது. அது மட்டும் அல்லாமல் பல் வேறு வகைகளில் அவமானபடுத்த பட்டார்.

நிறுவனத்தின் அந்த முடிவு தவறான முடிவு என்று தெரிந்தும், பிற ஊழியர்கள் பலர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், நிறுவன தலைவர் தன் முடிவில் பிடிவாதமாக இருந்ததை கண்டு வாயை மூடி கொண்டு விட்டனர். பேசிய ஒருவர் மட்டும் பலி கிடா ஆனார்.

சரி. நிறுவன தலைவர் எடுத்த முடிவு செயல் பாட்டிற்கு வந்ததா ? கணக்கில் மட்டும் செயல்பாட்டிற்கு வந்து அதன் படி தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது ( வெறும் ருபாய் இருபது ஆயிரம் சம்பளத்திற்கு பட்டய கணக்காளர்கள் விலை போவது படு கேவலம் ). ஆனால் நடை முறையில் இதனை செயல் படுத்த முடியவில்லை. கணக்கு தவறான கணக்காக தான் பெரும்பாலான இடங்களின் இருக்கிறது. நிறுவன தலைவருக்கு இது தெரியும்.
இருந்தாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று எப்பொழுதும் இருக்கும் அவர், தன் நிலையில் இருந்து மாற விரும்பவில்லை.

எந்த முடிவால் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் முதற்கொண்டு ஆர்வம் இழந்து சொல்லுவதை முடிந்தால் செய்வோம் இல்லை வாயை மூடி கொண்டு இருப்போம் என்ற நிலைக்கு ஆளாகிவிட்டனர். வழக்கம் போல சுயநலம் மிகுந்த ஒத்து ஊதிகள் நிறுவன தலைவருக்கு நீங்கள் எடுக்கும் முடிவுகள் தான் சரி, உங்களை போல யாரும் உண்டா என்று புகழ் படி தங்கள் மனசாட்சியை விற்று தங்கள் வயற்றை வளர்த்துகொண்டு இருக்கின்றனர்.

நிறுவனம் தவறான பாதையில் செல்கிறது, இதனால் நிறுவனத்திற்கு தான் கெடுதல் என்பதை எத்தகைய சர்வாதிகார தலைவர்கள் உணரமாட்டார்கள். உணர்ந்தாலும், அதை விட தங்கள் கவரவம் தான் முக்கியம் என்று செயல்படுவார்கள் .

ஹிட்லர் அழிந்தது எதனால் என்று உலகத்திற்கே தெரியும். பாகிஸ்தானில்  பர்வேஸ் முஷரப் என்ன ஆனார் என்று அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் சர்வாதிகாரிகள் திருந்துவதில்லை.

சரி. அப்படி என்றல் ஜனநாயகம் தான் ஒரு நிறுவனமோ அல்லது நாடோ நல்லபடியாக செயல்பட உதவுமா ?

அப்படியும் எல்லை. முழுமையான ஜனநாயகம், முழுமையானா சுதந்திரம் இரண்டும் கூட தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக ஒரு நிறுவனத்தின் தலைவர் முழுமையான ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு, அனைவாரையும் கலந்து ஆலோசித்து முடிவேடுபவராக இருந்தாலும் பிரச்னை வரும். அனைவரும் ஒரே மாதிரி எல்லை. கருத்துக்கள் வேறுபடும். முடிவெடுப்பதில் காலதாமதமாகும். இதை விட கொடுக்கும் சுதந்திரத்தை மதிக்காமல் தவறாக பயன்படுத்துபவர்களும், அதிக உரிமை எடுத்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.

ஜாதி, மதம், இனம், ஏழை - பணக்காரன், உயர்தவர் -தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் நாட்டின் நலன் அல்லது நிறுவனத்தின் நலன் கருதியே ஒரு தலைவன் செயல்படவேண்டும். ஆனால் எந்த அளவிற்கு சுதந்திரம் தரலாம் என்ற ஆழ்ந்த அறிவு இருக்கவேண்டும். 

கட்டுபடுத்த பட்ட ஜனநாயகம் பற்றி இப்பொழுது பேசப்படுகிறது. ஒரு நாடு வளர வேண்டும் என்றால், நாட்டுக்கு கெடுதல் விளைவிக்கும் செயலுக்கு எதிராக கடுமையான கட்டுபாடுகள் வேண்டும். 

ஒரு மாடு வளர்த்தால், அது எங்கு வேண்டும் ஆனாலும் மேயலாம். அது அதன் சுதந்திரம் என்று இருந்தால், அது பக்கத்துக்கு வீட்டு காரன் வயலை மேய்ந்து விடும். மாட்டிற்கு ஆவது 5 அறிவு. சில 6 அறிவு படித்த மனிதர்களும் அப்படி இருக்கிறார்கள். தொலைதொடர்பு துறை சம்மந்தமாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை கொடுத்தல், நாட்டையே மேய்ந்து விடுகிரார்கள். எனவே மாட்டிற்கு எந்த அளவு சுதந்திரம் தந்தால் பக்கத்துக்கு வயலுக்கு போகாது என்று சரியாக அளந்து, அதற்கு தகுந்த அளவு நீளம் உள்ள கயிறால் கட்டி வைக்க வேண்டும். 

ஒரு தலைவனுக்கு மட்டும் அல்ல, சக மனிதனுக்கு, நாம் நம் சொந்த விசயத்தில் மூக்கை நுழைக்க , எந்த அளவிற்கு சுதந்திரம் தரலாம் என்று முடிவு செய்ய வேண்டும். 

கட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம் தான் தனி மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்கு மற்றும் ஒரு நாட்டிற்கு தேவை. இதற்கு ஜாதி, மதம், இனம், ஏழை.பணக்காரன் போன்றவற்றை அளவீடாக நாம் எடுத்து கொள்ளகூடாது என்பது அதி முக்கியம். பொது நலனே அளவீடாக எடுத்து கொள்ளப்படவேண்டும்.




     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக