பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஏமாற்றாதே ஏமாறாதே.


ஏமாற்றாதே ஏமாறாதே. இந்த உலகில் ஏமாற்றாமல் வாழமுடியும். ஆனால் ஏமாறாமல் வாழமுடியுமா என்று சந்தேகம் வலுக்கிறது. ஏமாற்றுதல் சின்ன விசயத்தில் இருந்து கூட ஆரம்பிக்கிறது. பக்கத்துக்கு வீட்டு பெண்மணி சீட்டு பிடிக்கிறார்கள்- நானும் அதில் சேரட்டுமா என்று என் மனைவி கேட்டபொழுது நான் வேண்டாம் என்றேன். அதற்கு பதில் Recurring Deposit அல்லது பரஸ்பர பங்கு திட்டத்தில் (Mutual Fund)- மாதம் தோரும் முதலீடு செய்யலாம் என்றேன். என்னிடம் கருத்து கேட்ட என் மனைவி எனக்கு தெரியாமல் சீட்டுக்கு பணம் செலுத்தி வருவது நேற்று தான் தெரியவந்தது. 

நான் ஒரு உர நிறுவனத்தில் வேலை பார்த்த பொழுது, உர கடைகாரர் ஒருவர் தான் கடை வைத்திருக்கும் கிராமத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவர். அவர் சீட்டு படிக்க ஆரம்பித்த பொழுது அனைவரும் சேர்ந்தனர்.  மேலும் உர கம்பனிகளுக்கு அவர் கொடுக்கும் காசோலை என்றும் பணம் இல்லை என்று திரும்பியது இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த நம்பிக்கையை ஒரு நாள் அவர் தவிடு போடி ஆக்கினார். 
கடையில் கொஞ்சம் கொஞ்சமாக சரக்கை ( உரமூடைகள், பூச்சி மருந்துகள் ) குறைத்த அவர், ஒரு நாள் அதிகாலை யாருக்கும் சொல்லாமல் ஊரை விட்டு குடுபத்துடன் ஓடி விட்டார். எங்கு சென்றார் என்று யார்க்கும் தெரியவில்லை. உர கம்பனிகளுக்கு அவர் தந்த பல லட்சங்களுக்கான பின் தேதியிட்ட காசோலைகள் அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பின. கிராமத்து மக்களிடம் சீட்டு பிடித்த பணம் பல லட்சம். அனைத்தும் சேர்த்து ஒரு கோடி ரூபாயை தாண்டியது. பின்னர் தான் தெரிந்தது ஊரில் அவருக்கு சொந்த வீடோ நிலமோ இல்லை. வெளியூரில் இருந்து பிழைக்க வந்து, பல வருடங்களாக திட்டமிட்டு பல லட்சங்களை ஏமாற்றி சுருட்டி கொண்டு ஓடிவிட்டார். இது நடந்து பத்து வருடத்திற்கு மேல் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.  

வேலை பார்க்கும் இடத்தில் அடுத்தவரை போட்டு கொடுத்து தான் நல்ல பெயர் எடுத்து முன்னேறுபவர்களை நாம் நிறையவே பார்க்கலாம். புகழ்ச்சிக்கு அடிமையாகதவர்கள் வெகு சிலரே. இதனை பயன்படுத்திக்கொண்டு, தன் திறமையை மட்டும் நம்பாமல் அடுத்தவர்களுக்கு குழி பறித்து வாழ்கையில் முன்னேறுவார்கள். இதுவும் ஒரு வகையான ஏமாற்றும் செயலே. நிறுவனம் ஒரு தவறான நபரை நம்பி, நல்ல ஊழியரை (அவர் தன் திறமையால் நிறுவனத்திற்கு பல வகைகளில் உதவி இருந்தாலும்) இழக்கும் நிலை ஏற்படலாம். உழைத்தும் பலன் இல்லையே என்று அவர் தன் உழைப்பை குறைக்கலாம். மேலும் போட்டு கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து தானும் போட்டு கொடுக்கும் செயலை செயலாம். இதன் நீண்ட கால விளைவாக நிறுவனம் தான் நல்ல ஊழியர்களை இழந்து பாதிக்கப்படும். மேலும் இத்தகைய தவறான எண்ணம் உடையவர்கள் பெரிய பொறுப்பிற்கு வந்தால் நிறுவனம் தவறான பாதையில் செல்லும். நிதி ரீதியான தவறுகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

அரசியலை பற்றி கேட்கவே வேண்டாம். பணம் மற்றும் பதவி மட்டும் தான் அவர்கள் குறி. அதற்காக கொள்கைகளை ( அப்படி ஒன்று நிஜமாகவே இருக்காது ) காற்றில் பறக்கவிடுவார். வெட்கம் மானம் ரோஷம் போன்ற குணங்கள் எல்லாம் அறவே இருக்காது. வஞ்சகம், சூழ்ச்சி, பொய், புரட்டு, பழி பாவத்திற்கு அஞ்சாமை, கொலை செய்ய கூட தயங்காமை போன்றவைகளே அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள். சுருக்கமாக சொன்னால் நற்பண்புகள் என்று சொல்லப்படும் எதுவும் இல்லாமலும், தீய பண்புகள் அனைத்தும் கொண்டவருமே அரசியல்வாதி ஆக தகுதி படைத்தவர்கள். விபச்சாரியிடம் நண்பனுடன் சென்று, அவளை அனுபவித்துவிட்டு பிறகு பணம் தராமல் நண்பனை மாட்டிவிட்ட ஒருவனை முதலமைச்சாராக கொண்ட மாநிலம் இது. பல வகைகளில் இவர்களால் நாம் ஏமாற்ற பட்டு கொண்டிருக்கும் பொழுது ஏமாறாமல் நடப்பது சாத்தியமா ?

ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தை எமாற்றிகொண்டிருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டை எமாற்றிகொண்டிருக்கிறது. ஒரு இனம் இன்னொரு இன்னதை ஏமாற்றுகிறது. திறமையாக எமாற்றுகிரவனே திறமையான வியாபாரி. சாதாரண பூ விற்கும் கிழவியிடம் இருந்து நகை விற்கும் பெரிய நகை கடை முதல் ஏமாற்றுதலே முதன்மை. நிறம் மாறது என்று தெரிந்தும் விளம்பர கவர்ச்சியில் மயங்கி வெண்மையாக்கும் க்ரீம்களை வாங்கி தடவி கொள்கிறோம்.Active Salt அடைங்கியது என்று சாதாரண உப்பை கொண்ட பற்பசை விளம்பரத்தை கண்டு ஏமாறுகிறோம்.     

நாம் படிக்கும் வரலாறே எழுதியவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் ஆட்சியில் இருந்தவர்களின் விருப்பத்தில் அடிப்படையிலும் எழுதப்பட்டதே ஆகும். வரலாற்றின் உண்மை தன்மை நிகழ்காலத்தில் வாழும் நமக்கு தெரியாது. நம் வாழ்கையை நாம் எழுதினாலே பல விஷயங்கள் மறைக்கப்படும். பிறர் எழுதினாலும் அவர் அறிந்துகொண்ட தெரிந்துகொண்ட சில விஷயங்களின் அடிப்படையில் தான் எழுதமுடியுமே தவிர, உண்மையை எழுத முடியாது. காந்தி, அன்னை தெரேசா முதல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பலரது கறுப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டு தான் வருகிறது. இதில் யாரும் விதிவிலக்கல்ல. 

நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று ஒரு விதமான Hypo -Critic சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பல குடும்பத்தில் வேறு வழியில்லாமல் தான் கணவன் மனைவி இருவரும் சமூகத்திற்கு பயந்து சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கின்றனர். வாழ்கையில் விட்டுகொடுத்தல் தான் வேண்டும் என்றாலும் அன்பை தொலைத்துவிட்டு போலியாக வாழ்வதால் என்ன பயன் ?

காதலில் விழும் பருவ வயது குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றி வருவதும், உண்மையான(?) அன்பை செலுத்திய பெற்றோரை ஒரே நொடியில் தூக்கிபோட்டு செல்வதும் நடக்கிறது. கொஞ்சம் தெளிவானவர்கள் காதல் என்ற பெயரில் தன உடல் இட்சைகளை தீர்த்துக்கொண்டு காதலித்த பெண்ணையோ பையனையோ கழற்றிவிடுவதும் உண்டு.
உலகமே பொய் என்ற அச்சாணியில் தன் சுழல்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எமாற்றதெரியாதவரை வாழ தெரியாதவராக பார்க்கும் சமூதாய சுழல் ஏற்பட்டுள்ளது.

மிக பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் தொலைதொடர்பு துறையை ஏமாற்றி வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு தொலைபேசி அழைப்புகளாக காண்பித்து பல கோடி ருபாய் வரி எய்ப்பு செய்ததும், சுரங்க தொழிலில் 80௦ % தாதுக்கள் சட்டவிரோதமாக கடத்தபடுவதாக வரும் செய்திகளும், பங்கு சந்தை ஊழல், இராமலிங்க ராஜு செய்த சத்யம் நிறுவன ஊழல் காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் நிகழ்ந்த ஊழல், கிரிகெட் சூதாட்டம், IPL கிரிகெட் போட்டியில் நடந்த ஊழல், அரசியல் வாதிகள் செய்த பல்வேறு ஊழல்கள், முதல் அரசு அலுவலக கடை நிலை பணியாளர் மற்றும்  காவல் துறையினர்  பெரும் கையூட்டு வரை நம் தேசமே வெட்கி தலைகுனியும் அளவிற்கு ஏமாற்றுதல் நடந்துகொண்டிருக்கிறது.

இதை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் பிறந்தோம், இருந்தோம் , செத்தோம் என்று வாழ்பவர்கள் நேர்மையாக இருந்தாலும் நேர்மையானவர்கள் அல்ல. இப்படி கண்டு கொள்ளமால் நமக்கு என்ன என்று வாழ்வதால் தான் உலகம் மேலும் மேலும் கெடுகிறது.

ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவதாக சொல்லிகொள்ளும் அரசு சாரா நிறுவங்கள் சில வெளிநாட்டில் இருந்து பெரும் பணத்தை கண்ணுக்கு காட்டிவிட்டு சுருட்டி கொள்வதுடன் மட்டும் நில்லாமல், முடிதா அளவு யாருக்காக வேலை பார்கிறோமோ அவர்களையே ஏமாற்றுவதும் நடக்கிறது. ஐந்து கோடி ருபாய் வரவு செலவு நடக்கும் ஒரு மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பில். ஏழை பெண்களுக்கு இரண்டு சென்ட் / மூன்று சென்ட் நிலம் வாங்கி தருவதாக ( அதற்கு கடனும் தருவதாக ) கூறி அவர்களை ஏமாற்றி பன் மடங்கு அதிக விலைக்கு நிலத்தை விற்று, தன் பெயரிலும் தன் உறவினர்  பெயரிலும் நான்கே வருடங்களில் நாற்பது லட்ச ருபாய் மதிப்புள்ள நிலத்தை சொந்தமாகிகொண்ட ஒரு கேடு கட்ட பிறவியை சட்டபூர்வமாக எதுவும் செய்யமுடியவில்லை. கூட்டமைப்பின் பணத்தில் நிலம் வாங்க கடன் கொடுத்து தனக்கு கமிசனாக ( ரியல் எஸ்டேட் புரோக்கர் வைப்பதைவிட) பண் மடங்கு கமிசன் வைத்து பணம் சுருடியவன் அவன்.

நடக்கும் எமாற்றுதல்களை பட்டியல் இட்டு கொண்டே போகலாம். நேர்மையாக இருந்த ஒரே காரணத்தால் அரசு அலுவலராக இருந்த என் தந்தை தான் ஓய்வு பெரும் சமயத்தில் அரசியல்வாதிகளால் பெரும் துன்பத்திற்கு ஆளானார். நேர்மையாக செயல்பட்ட காரணத்தால் நானும் எனக்கு கிடைக்கவேண்டிய பணி உயர்வை இழந்தேன். ஆனாலும் விரக்க்திக்கு பதில் சமூகத்தின் மீதான, ஏமாற்றி பிழைப்பை நடத்தும் கீழ்த்தரமான மனிதர்களை நினைத்தால் கோபம் அதிகம் வருகிறது.

மதுரை கலக்டர் சகாயம் நேர்மையானவர். அவர் செயலுக்கு பல தடங்கல் வந்தாலும் தன் தனித்தன்மையை இது வரை விட்டுகொடுத்ததிலை. இதற்கு முன் கலக்டராக இருந்த உதயச்சந்திரன் அவர்களும் கீழ்த்தரமான அரசியலுக்கு அடிபடியவில்லை என்ற காரணத்தினாலேயே விரைவில் மாற்றம் செய்யப்பட்டார். பணம் அதிகாரம் பழி பாவத்திற்கு அஞ்சாமை போன்ற செயல்களால் நாட்டையே சுடுகாடாகும் சிலரை என்ன செய்வது. சட்டத்தையே வளைக்கும் இவர்களுக்கு யார் தான் தண்டனை கொடுப்பார்கள் ?
ஒரு சமுதாய எழுச்சி உருவாக வேண்டும். குறைவானவர்களாக உள்ள நல்லவர்கள் இந்த எழுச்சியை உண்டாக்கினால், நல்லவர்கள் அதிகம் ஆவர் கெட்டவர்கள் குறைவர். உங்களால்  முடிந்தவரை அநீதியை எதிர்த்து குரல் கொடுங்கள் . இதனால் தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கபட்டாலும், நேர்மை உயர நாடு செழிக்க உங்களால் ஆனதை செய்த மன திருப்தியுடன் வாழலாம். மன திருப்தியுடன் இறக்கலாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக