பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 6 மே, 2011

மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்களின் செயல்திறன்




மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்களின் செயல்திறன்  
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்களின் பேச்சை கடந்த 01.05.2011 தொழிலாளர் தினத்தன்று நடைபெற்ற மதுரை வாசகர்கள் குழுவின் கூட்டத்தில் கேட்க நேர்தது. திரு. சகாயம் அவர்களின் நேர்மை, செயல்திறன், நிர்வாகத்திறன் மற்றும் எவருக்கும் அஞ்சா நெஞ்சம் பற்றி கேள்விப்பட்டதுண்டு. மிக சிறப்பாக தன பதிவியை பயன்படுத்தி நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். அரசியல்வாதிகளுக்கு மற்றும் நேர்மையற்ற  அதிகாரிகளுக்கு பயபடாமல் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு பல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன .  ஆனால் அவர் மிக சிறந்த பேச்சாளர் என்பதும் தெரியவந்தது. அவர் பேசியதை முடிதவரை பதிவு செய்திருக்கிறேன். இந்த பதிவு நன்றாக இருந்தால் அந்த பெருமை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையே சாரும்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிறப்புண்டு என்று கூறி தன பேச்சை தொடங்கினார் - அமெரிக்க நாடு பொருளாதார வளர்ச்சிக்கு பெயர் போனது, ரஷ்ய நாடு மிக சிறந்த சோசியலிச நாடு , சீனா பழம் பெருமைக்கும் அறிவுக்கும் ஞானத்திற்கும் பெயர் போனது. அது போல நம் இந்திய நாடு பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்டிருந்தாலும் மிக பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது.    

நம் நாட்டின் சிறந்த குடிமகனாக பொறுப்புள்ள மனிதனாக நாம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர். தான் தேர்தல் ஆணையத்தால் மதுரையில் பணியமர்த்த பட்ட பிறகு தேர்தல் ஆணையம் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டதாகவும், தன் கடமையை தான் செய்ததாகவும் கூறிப்பிட்டார். இந்த தேர்தலில் மதுரை மக்கள் எந்த வித பயமும் தடைகளும் இல்லாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிலை நாட்டியதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ஒரு நல்ல குடிமகனாக ஒருவர் ஆற்ற வேண்டிய கடமை இது என்று தெரிவித்தார்.
    
தான் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பொழுது நடந்த சில நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார். அங்கு ஆட்சியராக பணிபுரிந்த பொழுது பல கிராமங்களுக்கு நேரடியாக சென்றதாகவும் அவ்வாறு செல்லும் பொழுது அங்கு உள்ள அரசு பள்ளிகளுக்கு கண்டிப்பாக செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அரசு பள்ளிகள் தான் ஒரு ஏழை மாணவன் தன் வாழ்வில் முன்னேற வைத்திருக்கும் கடைசி நம்பிக்கை என்று கூறினார். அத்தகைய ஆய்வின் பொழுது சில ஆசிரியர்கள் " தங்கள் பள்ளியில் படித்த ஒரு குறிப்பிட்ட மாணவன் தான் தற்பொழுது மிக பெரிய பொறியாளராக, மருத்துவராக, விஞ்ஞானியாக, பிற சாதனையாளர்களாக உள்ளார்கள் என்று கூறுவது உண்டு என்று கூறிப்பிட்டார். அத்தகைய சமயங்களில் இவர் " அது இருக்கட்டும், நீங்கள் எத்தனை நல்ல மனிதர்களை உருவாக்கி உள்ளீர்கள்" என்று கேட்கும் வழக்கத்தை வைத்திருந்ததாக கூறினார். நம் தேசத்திற்கு வெறும் மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் போன்ற வர்கள் தேவையில்லை. தேவை படுவதெல்லாம் நல்ல பண்பும், நேர்மையும் உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்று கூறினார்.

நம் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது மக்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி வெறும் 30௦ % மட்டுமே கல்வியறிவு பெற்றவராக இருந்தனர். ஆனால் தற்பொழுது 80௦ % மக்களுக்கு மேல் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆனால் அப்பொழுது மக்கள் நல்ல பண்பு உடையவர்களாக இருந்தனர். ஆனால் இப்பொழுது பண்பு குறைந்து காணபடுகின்றனர். பண்பு இல்லாதவர்களை படித்தவர்களாக கருத முடியாது. நாம் வாங்கும் பட்டங்கள்  
 B.A, M.A, M.BA, B.E,  M.E, M.sc, B.ed மற்றும் மருத்துவ பட்டங்கள் போன்றவை வெறும் பயிற்சிகளே. இந்த பயிற்சி பெற்ற அனைவரும்  படித்தவர்கள் என்று நாம் கருத முடியாது. படிப்புடன் பண்பும் சேர்தால் தான் ஒருவர் தன்னை படித்தவர் என்று கூறிகொள்ளமுடியும் என்று கூறினார் நம் கல்விசாலைகள் அத்தகைய படித்தவர்களை உருவாக்குபவைகலாக இருக்க வேண்டும்.  துரதிஷ்டவசமாக அவை நல்ல பண்புடன் கூடிய கல்வியை போதிப்பது இல்லை.

திரு. சகாயம் அவர்கள் ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தன்னை ஆச்சிரிய படவைத்த சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டார். பொதுவாக அரசு பள்ளியில் தமிழில் பயிலும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கூட ஆங்கிலத்தில் கேட்க படும் சாதாரண கேள்விகளுக்கு கூட சரியாக பதில் அளிக்கமாட்டார்கள் "What is your name ?" என்ற கேள்விக்கு மட்டும் சரியாக பதில் அளிப்பார்கள். அதையும் தாண்டி   "What 's your father ? என்று கேட்டாள் பல குழந்தைகள் தங்கள் தந்தையின் பெயரை தான் கூறுவர். ஆனால் இந்த ஐந்தாம் வகுப்பு சிறுவனோ சரியாக " My father is a potter " என்று பதிலளித்ததாக கூறினார். மேலும் " What do you want to become in future ?" என்ற கேள்விக்கு " I am a doctor" என்று அந்த சிறுவன் பதிலளித்ததாக அவர் கூறினார். நீ இன்னும் ஐந்தாம் வகுப்பு தான் படிக்கிறாய், எப்படி உன்னை மருத்துவர் என்று எப்பவே நீ கூறலாம் என்று கேட்டதற்கு அந்த  சிறுவன் சிறிது யோசித்துவிட்டு " I am a future Doctor' என்று கூறினான். இதை கேட்டு தான் பெரிதும் மகிழ்ததாக திரு.சகாயம் அவர்கள் கூறினார்.
நம் தமிழ் நாட்டில் தமிழ் வளர்வது அரசு பள்ளிகளில் தமிழில் படிக்கும் மாணவர்களால் தான் என்றும் அவர்கள் தான் தாங்கள் வளர்ந்த பிறகு தங்கள் பேச்சாலும் செயலாலும் தமிழை வளர்கின்றனர் என்று அவர் கூறினார்.     

கிரேக்க தத்துவ ஞானி "Diogenes "  ஒரு முறை தன் கையில் ஒரு விளக்கை வைத்து கொண்டு பட்ட பகலில் ஏதன்ஸ் நகர வீதிகளில் எதையோ ஒன்றை  தேடி அலைந்தார். அவர் அங்கும் இங்கும் பல முறை தேடிக்கொண்டே இருந்தார் . வெகு நேரம் ஆகியும் அவர் தேடல் நிற்கவில்லை. இதை கண்ட ஒருவன் Diogenes னிடம் சென்று " அப்படி என்ன தான் தேடிக்கொண்டு இருகின்றீர்கள்" என்று வினவினான். அதற்கு Diogenes ' நான் நல்லவர்களை தேடி கொண்டிருக்கிறேன் என்று கூறினானாம். இரண்டாயரம் ஆண்டுகளக்கு முன்பே இது தான் நிலை என்றால் தற்பொழுது உள்ள நிலையை எண்ணி பாருங்கள் என்று ஆட்சியர் அவர்கள் கூறினார்.

பொது மக்களின் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் சாதாரண அரசு ஊழியர் நான். நான் மட்டும் அல்ல, அனைத்து அரசு ஊழியரும் அப்படி தான். நாங்கள் பதவியேற்கும் பொழுது நேர்மையாக பார பட்சம் பாராமல் பணி புரிவோம் என்று  உறுதிமொழி எடுத்து கொண்டு தான் பணிபுரிவதாகவும் கூறினார். ஒரு அரசு ஊழியர் பெரும்பாலும் நேர்மையாக தான் தன் பணி காலத்தை தொடங்குவதாக அவர் சொன்னார். துணை ஆட்சியராக இருக்கும் பொழுது மிக நேர்மையாக ஒருவர் இருப்பார். இணை ஆட்சியராக பொறுபேற்கும் பொழுது நேர்மை சட்ட்று குறையும். ஆட்சியராக இருக்கும் பொழுது நேர்மையை முற்றிலுமாக தொலைக்க நேரிடும். அரசியல் மற்றும் பிற புற சுழல்கள் நேர்மையை விட்டுவிட ஒருவரை நிர்பந்தம் செய்யும். வேறு வழியில்லாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவும், தன் குடும்பநலனை கருத்தில் கொண்டும் மாறிவிடுவர். எத்தகைய சூழலிலும் தன் நேர்மையை விட்டுகொடுகாதவனே ஒரு உண்மையான நேர்மையாளன் என்று திரு. சகாயம் கூறினார்.    

நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மார்டின் லூதர் கிங் அவர்களை மேற்கோள் காட்டி " இந்த உலகம் கெட்டதாக இருப்பதற்கு காரணம் சிறுபான்மையினராக இருக்கும் கெட்டவர்கள் அல்ல. அவர்களின் தீய செயல்களை கண்டும் செயல்படாமல் இருக்கும் நல்லவர்களால் தான்". நாம் நல்லவர்களாக இருப்பதன் அடையாளம் தீமை செய்யாமல் இருப்பது அல்ல. மிகவும் தவறு என்று தெரிந்தும் தட்டி கேட்காமல் பொறுமையாக இருந்தால் தவறுக்கு துணை போகிறோம் என்று அர்த்தம். அப்படி இல்லாமல் மிக தைரியமாக தவறை தட்டி கேட்கும் துணிவு ஒருவருக்கு இருக்கவேண்டும்.  

ஒரு மாவட்ட நிர்வாகியாக மக்களுக்கு உதவும் வாய்பாக தன் பதவியை ஒரு முறை பயன்படுத்தியதை பற்றி கூறினார். ஒரு ஊனமுற்ற பெரியவர் ஒருவர் தனக்காக மூன்று சக்கர மிதிவண்டி வேண்டி ஒரு நாள் நேரில் வந்து மனு அளித்த பொழுது அவருக்கு உடனே உதவவேண்டும் என்று நினைத்தார் திரு.சகாயம். பொதுவாக இத்தகைய உதவி பெற குறைந்தபட்சம் மனு அளிததில் இருந்து மூன்று மாத காலம் ஆவது ஆகும். அவரக்கு உதவி செய்ய இரண்டு தகவல்களை மட்டும் சரிபார்க்க வேண்டும்.


  1. அவர் தான் குறிப்பிட்ட கிராமத்தை சார்ந்தவர் தானா என்பதை உறுதிபடுத்தவேண்டும்.
  2. அவர் உண்மையில் ஏழை தான் என்பதை உறுதி செய்ய வேண்டும்
எனவே திரு. சகாயம் அவர்கள் தன் உதவியாளரை அந்த பெரியவரின் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொள்ள செய்து உடனடியாக தகவலை உறுதிபடுத்த  சொன்னார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு அந்த பெரியவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க அனுமதி தரும் ஆவணத்தை தயார் செய்ய சொன்னார். மனு கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த பெரியவருக்கு மூன்று சக்கர வண்டி தரப்பட்டது. அத்துடன் நிற்காமல் அந்த பெரியவரை "நீங்கள் எப்படி இந்த வண்டியை முப்பது கிலோமீட்டர் தாண்டி உள்ள உங்கள் ஊருக்கு எடுத்து செல்வீர்கள் என்று கேட்டார் ". அந்த ஏழை பெரியவருக்கு மனு கொடுத்த உடனே அதற்கான  பலன் கிடைத்த மகிழ்ச்சியில்  இது குறித்து யோசிக்ககூட முடியவில்லை. எப்படியாவது எடுத்து செல்வேன் என்று பதில் கூறினார். திரு. சகாயம் அவர்கள்  இதற்கும் உதவ நினைத்தார். அவர் துணை கமிஷனரை உடனே அழைத்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே வாகன சோதனை செய்ய சொன்னார். நம் நாட்டில் போக்குவரத்து விதி மீறல் மிகவும் அதிகம். முறையான ஆவணம் இல்லாமல் தான் பல வாகனங்கள் இயக்க படுகின்றன. இவ்வாறு செய்த சோதனையில் முதல் வாகனமே முறையான ஆவணம் இல்லாமல் சிக்கியது. அந்த வாகன ஒட்டிக்கு இரண்டு வாய்ப்பு தரப்பட்டது. ஒன்று இரண்டாயிரம்  ருபாய் அபராதம் கட்டுவது. இல்லை என்றால் ஊனமுற்ற பெரியவரை அவரின் கிராமத்திலேயே மூன்று சக்கர வண்டியுடன் இறக்கி விடுவது. இரண்டாயிரம் ருபாய் அபராதம் செலுத்துவதை விட அந்த பெரியவரை கிராமத்தில் கொண்டுவிடும் செலவு குறைவு என்பதால் அந்த வாகன ஒட்டி அந்த பெரியவரை அவர் கிராமத்தில் கொண்டு விட இசைந்தார். ஒரு அரசு ஊழியர்க்கு மக்களுக்கு இது போல உதவுவதை விட பெருமை தரும் விஷயம் என்ன இருக்க முடியும் ? என்று ஆட்சியர் கூறினார்.

நம் நாட்டில் லஞ்சமும் ஊழலும் மிகவும் மலிந்து விட்டது என்பதை பல சந்தர்பங்களில் நாம் உணர்ந்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் அவர்களும் ஒரு வேதனையான சம்பவம் ஒன்றை குறிப்பிட்டார். 2010 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று ஒரு சுதந்திர போராட தியாகியின் மகன் நடத்தும் கல்வி நிறுவனத்தில் உரையாற்ற நாமக்கல்- ராசிபுரம் செல்லும் வழியில் ஒரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் சென்று கொண்டிருந்தனர். தங்கள் வாகனத்திற்கு முன்னால் சென்ற அந்த வாகனம் நிலையில்லாமல் தடுமாறி சென்றுகொண்டிருந்ததை கண்ட சகாயம் அவர்கள் அந்த வாகனத்தை நிறுத்த சொன்னார். பின்னர் தன் உதவியாளரை விட்டு சோதனை செய்ததில் அவர்கள் மது அருந்திவிட்டு மிதமிஞ்சிய போதையில் வகனத்தை ஒட்டியது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் கூட இல்லை. எனவே கோபம் கொண்ட ஆட்சியர் RTO அவர்களிடம் உடனே புகார் செய்து அவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை கண்டு பயந்த ஒரு இளைஞன், ஆட்சியரிடம் வந்து " ஐயா எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் இனி இது போன்ற தவறை செய்ய மாட்டோம் என்று கூறிக்கொண்டே தன மேல்சட்டை பாக்கெட்டில் கையை விட்டு ஒரு நூறு ருபாய் நோட்டை எடுத்து ஆட்சியரிடம் தந்தானாம்.  நம் நாட்டில் மித மிஞ்சிய போதையில் கூட ஒருவன் தெளிவாக இருக்கிறான் என்றால் அது " லஞ்சம் கொடுத்தல் எதையும்  நாம் சாதிக்கலாம்" என்பதில் தான் என்று அவர் கூறிப்பிட்டார். நமது நாடும் மக்களும் மிகவும் கேவலமான பாதையில் பயனபடுகிறோம் என்பதற்கு இதுவே சான்று.

(ஒரு "Twitter " செய்தி : முன்பு : அவர் மிகவும் நல்லவர். லஞ்சமே வாங்கமாட்டார். இன்று: அவர் மிகவும் நல்லவர். கைநீட்டி லஞ்சம் வாங்கிவிட்டால் காரியத்தை முடித்து கொடுத்துவிடுவார். நல்லவருக்கான இலக்கணமே மாறி போய்விட்டது )

மற்றுமொரு சம்பவத்தை கூறிப்பிடும் பொழுது ஒரு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன குடும்ப பிரச்னை சமந்தமாக மனு அளித்தும் தன்னால் உதவ முடியாமல் போனதை பற்றி கூறிப்பிட்டார். மனுவில் அந்த சிறுவன் தன் தந்தையும்  தாயும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்றும் காதால் திருமணம் செய்தவர்கள் என்றும் குறிபிட்டிருந்தான். தன் தாயின் மீது கொண்ட அன்பின் காரணமாக தனக்கு சொந்தமான ஒரே குடிசை வீட்டையும் தன் தந்தை எழுதிவைத்து விட்டதாகவும், ஆனால் தன் தாய் வேறு ஒருவரிடம் கொண்ட தொடர்பால் தந்தையை விட்டு விலகிவிட்டதாகவும் குரிபிடபட்டு இருந்தது. அது மட்டும் அல்லாமல் சொத்து தன் பெயரில் இருப்பதால் தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளை விட்டாய் விட்டு விரட்டிவிட்டதாகவும் எழுதப்பட்டு இருந்தது. ஆட்சியர் அவர்கள் அந்த சிறுவனை பல நபர்கள் மனுவுடன் வந்திருப்பதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறினார். அனைத்து மனுவையும் பார்த்து முடித்த பொழுது மதிய உணவு சாப்பிடும் நேரம் வந்துவிட்டது. உடனே அந்த ஆட்சியர் அந்த சிறுவனை அழைத்து கொண்டு தன் விட்டுக்கு சென்று உணவருந்தினார். உணவருந்தும் பொழுது ஆட்சியர் அவன் படிப்பு குறித்து சில கேள்விகளை கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் வகுப்பில் படிப்பில் இரண்டாவது மாணவன் என்றும், தினமும் காலையில் பள்ளி மைதானத்தில் ஓட்ட பயிற்சி எடுபதாகவும் கூறினான். மேலும் எதிர்காலத்தில் பெரிய காவல் அதிகாரியாக ஆவது தன் லட்சியம் என்றும் கூறினான். அதற்கு வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் மனு மீது தக்க நடவடிக்கை எடுபதாக கூறி அவனுக்கு ஒரு "Dictionary " யை பரிசளித்து வழியனுப்பி வைத்தார். பிறகு உதவி கமிஷனரிடம் மனு குறித்து மூன்று நாட்களில் நடவடிக்கை எடுத்து தனக்கு தகவல் அளிக்கும் படி கூறினார். ஆனால் அந்த சிறுவனின் தாய் எந்த பேச்சுவார்த்தைக்கும் உடன்படவில்லை. மேலும் ஒரு வக்கிலை அமர்த்திக்கொண்டு அவர் மூலம் தான் பேசினார். பிறகு கோவையில் நடந்த செம்மொழி மாநாடு சம்மந்தமாக அவசர வேலை வந்த காரணத்தால் உதவி கமிஷனரும் அந்த வேலையை பார்க்க சென்று விட்டார். அந்த வேலை முடிந்ததும் சிறுவன் மற்றும் அவன் குடும்பத்தின் பிரச்சனையை பார்பதாக ஆட்சியரிடம் தகவல் அளித்தார். ஒரு நாள் காலை தினசரி ஒன்றை ஆட்சியர் படித்த பொழுது " ஒரு தந்தை தன் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை படித்தார்" தன்னிண்டம் உதவி கேட்டு வந்த சிறுவனின் குடும்பம் தான் அது என்பதை தெரிந்து கொண்டார் ஆட்சியர். இத நிகழ்வு தனக்கு மிகுந்த மனவேதனையை அளிததாக ஆட்சியர் கூறினார்.

ஒரு மாவட்ட அட்ட்சியர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு திரு.சகாயம் அவர்களே உதாரணம். அரசியல்வாதிகள் குனிந்து வா என்றால் தவழ்து வர தயாராக இருக்கும் அதிகாரிகள் மத்தியில் முதுகெலும்புள்ள அதிகாரியாக அவர் செயல் புரிந்து வருகிறார். திரு. சகாயம் அவர்கள் செய்த இன்னும் பிற நல்ல செயல்களின் பட்டியல் இதோ 
  • நாமக்கலில் பனி புரிந்த பொழுது தன் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிட்ட இந்திய நாட்டின்  முதல் ஆட்சியர்.
  • காஞ்சிபுரத்தில் DRO ஆகா பணி புரிந்த பொழுது ஒரு குளிர்பான பாட்டிளில் அழுக்கு படிதிருந்ததாக நுகர்வோர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த குளிர்பானத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் அது பருகுவதற்கு உகந்ததல்ல என்று பரிசோதனை முடிவு தெரிவித்தது. உடனே தாசில்தார் அவர்களுடன் சென்று அந்த வெளிநாட்டு குளிர் பான தயாரிப்பு நிறுவனத்திற்கு சீல் வைத்தது. அவர் வீடு திரும்பும்  முன் ஆட்சியர் முதல் அரசியல்வாதிகள் வரை அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். தன் மீது தவறு இருந்தால் தன்னை பணி இடை நீக்கம் செய்யுமாறும், தான் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
  • மணல் கொள்ளை கும்பல் மீது நடவடிக்கை எடுத்த காரணத்தினால் அவர் மீது கொலை முயற்சியும் நடந்தது.
  • நாமக்கல் ஆட்சியராக பணி புரிந்த பொழுது ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தலை தானே முன்னின்று தடுத்து பெருமளவு கட்டுபடுத்தினர். ஏறக்குறைய கடத்தலில் இடுபட்ட மூண்ணூறு ௦௦ வாகனங்களுக்கே மேல் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.         
  • .ஆடு தொட்டி கழிவுகளினால் ஏற்பட்ட நீர்நிலைகளின் சீர்கேட்டை தடுக்க அதனை மூடும் படி செய்தார். 
  • "கட்டிடங்களுக்கு நடுவே கானகம் " என்ற திட்டத்தின் மூலம் ஏழு லட்சம் மரக்கன்றுகளை நாமக்கல் மாவட்டத்தில் நட்டு அதனை பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்  
  • உழவர் சந்தை செயல்படும் இடத்தில " உழவர் உணவகம்" என்ற திட்டத்தை மாலை நேரத்தில் செயல்படுத்தி பாரம்பரிய உணவு வகைகள் அங்கு கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார்.  
  • கிராமம் தாங்கும் திட்டத்தை செயல்படுத்தி மக்கள் குறைகளை அவர்கள் கிராமத்திற்கே சென்று கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் செய்தார். ( தான் கிராமத்தில் தங்குவதற்கு குளிர் சாதன வசதி கேட்டார். இதற்காக தான் கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் வாங்க வேண்டி இருந்தது என்ற பொய்யான அரசியல் ரீதியான புகாருக்கு உள்ளானர் )
  • கிராம நிர்வாக அலுவலார்கள் அவர்களின் பணி குறிப்பு அடிப்படையில் தாங்கள் பணியாற்றும் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் கோபம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். அனால் பொது மாக்கள் அனைவரும் ஆட்சியருக்கு ஆதரவாக நின்றனர்.   
  • தான் பணி காலத்தில் பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊகபடுத்தினர் 
  • தேர்தல் ஆணையத்தால் மதுரையில் பணி அமர்த்த பட்ட பிறகு உண்மையான அஞ்சாநெஞ்சனாக செயல்பட்டு தேர்தல் விதி மீறல்களை கட்டுபடுதினார். அதனால் அழகிரியின் கோபத்திற்கு ஆளாகி பொய் புகரும் அவர் மீது சுமத்தப்பட்டது.
  • மேலூரில் தாசில்தாரை தேர்தல் பணியை சரியாக செய்ய விடாமல் தடுத்ததாக அழகிரி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். பயத்தின் காரணமாக தாசில்தார் பின்வாங்கினர். அவர் மீதும் பணி இடை நீக்க நடவடிக்கை எடுத்தார்   
  • மதுரையில் நூறு டன் னுக்கு மேற்பட்ட, கால்சியம் கார்பெட் ( calcium Carbide ) மூலம் பழுக்க வைக்க பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்து அழிக்க உத்தரவிட்டார். இதனால் வியாபாரிகள் அனைவரும் செயற்கை கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்க வேண்டாம் என்று தாங்களாகவே உடன்படிக்கை எடுத்துகொண்டனர்.
  • பல கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை மதுரையிலும் சந்தித்து அவர்களை பண்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
அவர் மதுரையில் தொடர்ந்து ஆட்சியராக செயல்பட்டால் அரசியல்வாதிகளுக்கும் செயல்படாத அதிகாரிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்குவார் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக